Friday, October 29, 2004

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

கேள்வி:
அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறைவான வார்த்தையாகக் கருதப்படுகிறபோது, இறைவனை அவன் என்று முஸ்லீம்கள் குறிப்பிடுவது ஏன்?

பதில்:
இது மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மொழி, வரலாறு, பழக்கவழக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். எனவே இது பற்றி விரிவாக நாம் அறிந்து கொண்டால் தான் மற்றவர்களுக்க விளக்கமுடியும். இது சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதலில் அறிந்து கொள்ளவேண்டிய விஷயமாகும். அவன் என்பதற்கு அரபு மொழியில் ஹுவ என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அவர்கள் என்பதற்கு ஹும் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் ஒருவனைக் குறிப்பது என்றால் ஹுவ என்றும் பலரைக் குறிப்பது என்றால் ஹும் என்றும் கூறுவார்கள் மாதியாதைக்காக ஒருவனைக் குறிக்கும் போது (ஹும்) அவர்கள் என்று அரபியில் கூறவேமாட்டார்கள்.

அல்லாஹ், தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது ஹுவ என்று தான் குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான் மரியாதைக்காக ஹும் (அவர்கள்) என்று அவன் பயன்படுத்தவில்லை. அது போலவே இப்லீஸ் பிர்அவ்ன் போன்ற கொடியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது ஹுவ (அவன்) என்று தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் ஹுவ என்று தான் கூறவேண்டும் மரியாதைக்காக ஒருமையைப் பன்மையாக மாற்றுவது அரபு மொழியில் கிடையாது.

ஹுவ (அவன்) என்ற குறிப்பிடும் போது பலரைப் பற்றிக் கூறப்படவில்லை ஒரு நபரைப் பற்றி மட்டும் தான் கூறப்படுகிறது என்று தான் அரபுகள் விளங்குவார்களே தவிர அவர் மரியாதைக்குரியவரா இல்லையா என்பதை இவவார்த்தையிலிருந்து புரிந்துக் கொள்ளமாட்டார்கள். இதே போல் ஆங்கிலத்தில் He என்ற வார்த்தை ஒருவரை குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றது. They (அவர்கள்) என்பது பலரை குறிப்பிடவே பயன்படுத்தப்படுகின்றது மரியாதைக்காக ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது They என்று குறிப்பிடுவதில்லை.

இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த நிலை தான் உள்ளது. அவன் என்பது ஒருவரைக் குறிக்கும் அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ் இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித்தான் இருந்தது. ஒரு நபரைக் குறிப்பிடுவதற்குப் பலரைக் குறிப்பிடுவதற்குரிய சொல்லை மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமாக மாறிவிட்டது. ஒருவரைக் குறிப்பிட அவர் என்ற பன்மைச் சொல்லைப் பயன்படுத்தலானார்கள். அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி அவர்கள் என்றனர். மரியாதை கொடுக்கப்படாதவரை குறிப்பிடும்போது அவன் எனவும் மரியாதை கொடுக்கப்பட்ட வேண்டிய வரை குறிப்பிடும் போது அவர் எனவும் அதிகம் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும் மாற்றிக் கொண்டனர்.

தமிழில் "மரியாதைப் பன்மை" வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் தமிழில் அவன் என்றே குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே குறிப்பிடப்படுகின்றனர். வள்ளுவன் சொன்னான், கம்பன் கூறகிறான், ராமன் வில்லை ஒடித்தான் என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம். அதே போலவே கடவுளைக் குறிக்கும் போதும் அவன் நீ என்று தான் குறிப்பிடப்பட்டது மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வருவதற்கு முன்பே கடவுள் அவன் என்று இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டதால் அதுவே தொடர்ந்து வருகிறது.

கம்பன் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கூற மாட்டோம். கருணாநிதி சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்போம். இதற்க்கு காரணம் கருணாநிதி மரியாதைப்பன்மை வழக்கமாகி விட்ட காலத்தில் வாழ்கிறார் கம்பன் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வராதக் காலத்தில் வாழ்ந்தார்.

அல்லாஹ்வை அவன் என்று கூறுகின்ற முஸ்லிம்கள் மற்ற எந்த சமுதாயமும் கடவுளுக்கு அளிக்கும் மரியாதையை விட அதிக மரியாதை அளிப்பதைக் காணலாம். எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போது கடவுளைப் பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம்தான். அவன் என்று கூறுவது மரியாதைக் குறைவுக்காக அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மேலும் அவர் என்பதும் அவர்கள் என்பதும் பலரைக் குறிக்கின்ற சொல்லாகும். அல்லாஹ் கூறினார்கள் எனக் கூறும் போது நிறைய அல்லாஹ் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும் வார்த்தையில் காட்டும் மரியாதையை விட ஏகத்துவம் மிகவும் முக்கியமானதாகும். அல்லாஹ்வை அவர்கள் என்று கூறிப் பழகி விட்டால் எதிர்காலத்தில் நிறைய அல்லாஹ்கள் இருந்திருப்பார்களோ என்று நினைத்து விடலாம் அவ்வாறு நினைத்தால் இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து விடும். ஒருவன் என்று கூறுவதுதான் முக்கியமானது என்பதால் அவன் என்று கூறுவதை தமிழ் கூறும் முஸ்லிம்கள் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அதே சமயத்தில் மார்க்கத்தில் இப்படி எந்தக் கட்டளையும் இல்லை.

அல்லாஹ்வை அவர் என்றோ நீங்கள் என்றோ ஒருவர் கூறினால் மார்க்கத்தில் இது குற்றமாகாது. அவ்வாறு கூறும் உரிமை அவருக்கு உள்ளது. மரியாதையை மனதில் வைத்து ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் அவன் எனக் கூறுவதே சிறந்தது என்பது நமது கருத்தாகும்.

Thursday, October 21, 2004

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

கேள்வி:
இஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் கடவுள் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை?

பதில்:
நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்னையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை, நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! உங்களுக்கும் ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.

இருக்கின்ற தகுதியை விட குறைந்த தகுதிக்கு இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்கமாட்டார்கள் என்னும் போது, கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வார்? இழிவுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புவதுதான் எந்த வகையில் நியாயமானது? இப்படி சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்பட்டுவிடும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம். நான் தான் கடவுள் அல்லது கடவுளின் அவதாரம் எனக் கூறி ஏமாற்ற நினைத்தால் எளிதில் ஏமாற்றி விட முடியும். கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் ஏமாற்ற முடியும். அவர்களைச் சுரண்டமுடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை.

கடவுள் மனிதனாக வரவேமாட்டான் என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம். மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ணவேண்டும் பருகவேண்டும் மலஜலம் கழிக்கவேண்டும். மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபடவேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்கவேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும்.

ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப்பேர் இன்றைக்கு பூமியில் இருக்கவேண்டும். ஆனால் ஒரே ஒரு கடவுளின் பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. அதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்கத் தகுதியானதும் அல்ல என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

Monday, October 04, 2004

மதரஸாக்களுக்கு அனுப்புவது ஏன்?

கேள்வி:
நவீன ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காத நீங்கள், உங்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தி மதரஸாக்களுக்கு அனுப்புவது ஏன்?

பதில்:
என்னத்தான் படித்தாலும் வேலை வாய்ப்பு முஸ்லிம்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்பதை அனுபவ பூர்வமாக முஸ்லிம்கள் விளங்கியுள்ளனர். இதன் காரணமாகவே படிப்புக்கு ஆர்வம் ஊட்டுவதில்லை. உயர்கல்வி கற்பதற்கு இட ஒதுக்கீடும் முஸ்லிம்களுக்கு இல்லாததால் பணம் கொடுத்துத்தான் இடம் பிடிக்கும் நிலை உள்ளது. இது போன்ற காரணங்களால் தான் முஸ்லிம்கள் நவீன கல்வியில் ஆர்வம் காட்டுவதில்லை. அந்த நிலையும் சமீபகாலமாக மாறி வருவதைத் காண்கிறோம்.

வெள்ளையர்களை வெறுக்கிறோம் என்ற பெயரில் தேச பக்தி முற்றிப் போய் ஆங்கிலக் கல்வி படிக்கக்கூடாது என்று முஸ்லிம் அறிஞர்கள் அன்று அறிவுரை கூறினார்கள். அதை ஏற்று முஸ்லிம்கள் படிப்பை நிறுத்தினார்கள். காயிதே மில்லத் போன்றவர்களே படிப்பை பாதியில் விட்டனர். வெள்ளையர் காலத்தில் இட ஒதுக்கீடு இருந்தும் தேசப்பற்றின் காரணமாக முஸ்லிம்கள் கல்வியைப் புறக்கணித்தனர். ஆனால் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு வெள்ளையர்கள் அளித்து வந்த இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது.

இன்றைய முஸ்லிம்களின் முன்னோர்கள் தேசப்பற்றின் காரணமாக் கல்வியைக் கற்காததால் அதன் முக்கியத்துவம் தெரியாத சமுதாயமாக இன்றைய முஸ்லிம்கள் உள்ளனர்.