Wednesday, September 22, 2004

பழைமைவாதிகளாகவே சித்தரிக்கப்படுவது ஏன்?

கேள்வி:
முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகவே சித்தரிக்கப்படுவது ஏன்? முஸ்லிம்கள் தங்களது எதிரிகளை இனங் கண்டுகொள்ளாதது ஏன்? அனைத்து பிற்படுத்தப்பட்டோர். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை இந்துக்கள் என நினைத்து அவர்கள் எதிரிகளாக கருதுவது ஏன்?

பதில்:
முஸ்லிம்கள் பழமைவாதிகளாகச் சித்தரிககப்பட்டால்தான், இஸ்லாத்தின் பால் மற்றவர்கள் கவனத்தைத் திருப்பமாட்டார்கள் என்பதற்காக திட்டமிட்டு இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நரபலியிடுதல், ஜோதிடம் பார்த்தல், விதவை விவாகம் மறுத்தல், பெண் சிசுக்களைக் கொல்லுதல், தீண்டாமையைக் கடைப்பிடித்தல், போன்ற எல்லா விதமான பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவதற்குக் காரணம் இஸ்லாம் வளர்ந்து விடக்கூடாது என்ற ஓரே நோக்கம் தான்.

தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் முஸ்லிகள் பகைவர்களாகக் கருதுகிறார்கள் என்பதும் தவறாகும். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்துத்துவா சக்கதிகளையும் இந்து மத சகோதரர்களை வேறுபடுத்தித்தான் பார்க்கிறார்கள் இந்துத்துவ சிந்தனை இல்லாத மேல் ஜாதி இந்துக்களையே முஸ்லிம்கள் எதிரிகளாகக் கருதாத போது தங்களைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களை பகைவர்களாகக் கருத மாட்டார்கள். ஆயினும் சங்கபரிவாரத்தினரின் சதியின் காரணமாக ஒரு சில பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பகைமை இருக்கிறது. இத்தகைய மோதல்கள் குறைவான அளவே உள்ளன என்றாலும் இத்தகைய நிலைமை தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு பெரிய தடையாக உள்ளது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும் தங்கள் சுமூகமான நடவடிக்கை மூலம் இத்தகைய எண்ணத்தை நீக்க பாடுபட வேண்டும்.

Tuesday, September 21, 2004

இஸ்லாமிய மார்க்கத்தில் நான்கு பிரிவுகள் உண்டா?

கேள்வி:
இஸ்லாமிய மார்க்கத்தில் சன்னி, ஷியா, ஷேக், சையத் போன்ற பல பிரிவுகள் உள்ளன. இஸ்லாத்தை நான்கு பிரிவுகளாக பிரித்திருப்பதின் நோக்கம் என்ன? இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களை பின்பற்றுவதாக இது அமைந்துள்ளதே? உ.பி.யிலும், பாகிஸ்தானிலும் சன்னி முஸ்லிம்களுக்கும் ஷியா முஸ்லிம்களுக்கும் இடையில் சண்டைகள் நடப்பது ஏன்?

பதில்:
இஸ்லாமிய மார்க்கத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதாகக் கூறுவது முதலில் தவறாகும். முஸ்லிம்களிடம் ஏன் இந்தப் பிரிவுகள் என்று தான் கேள்வி அமைந்திருக்கவேண்டும். இத்தகைய பிரிவுகளை திருக்குர்ஆனும் அனுமதிக்க வில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அனுமதிக்கவில்லையென்றாலும் முஸ்லிம்களிடம் இத்தகைய பிரிவுகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆனால் இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் போன்றதாக முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவை ஒப்பிட எந்த நியாயமும் இல்லை.

வர்ணம் அடிப்படையிலான பிரிவுகள் மனிதனின் பிறப்பின் அடிப்படையில் கிடைக்கக் கூடியவை. முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவுகள் மார்க்கத்தைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் மூலம் ஏற்பட்டவை. தலித் சமுதாயத்தில் பிறந்தவர் ஒருக்காலும் அவர் என்ன தான் முயன்றாலும் ஐயராக முடியாது, முதலியாராக முடியாது, செட்டியாராக முடியாது, ஆனால் ஷியாப் பிரிவில் இருந்தவர் அக்கொள்கையிலிருந்து விலகி எந்த நிமிடத்திலும் சன்னி பிரிவில் சேர்ந்து விட முடியும். சன்னிப்பிரிவைச் சேர்ந்தவர் அப்பிரிவில் அவருக்கு விருப்பமில்லாவிட்டால் எந்த நிமிடமும் ஷியா பிரிவில் சேர முடியும்.

ஷியா பிரிவினர் இறந்தவர்களின் சமாதிகளை வழிபடுவார்கள். சன்னி பிரிவினர் அவ்வாறு வழிப்படமாட்டார்கள். இது போன்ற சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ளனரே தவிர பிறப்பின் அடிப்படையில் அல்ல. இது வர்ணாசிரமத்துக்கும் முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவுகளுக்குமுள்ள முக்கிய வேறுபாடு. மேலும் வர்ணாசிரம தர்மம் என்பது தீண்டாமையை நிலை நாட்டுவதற்காகவும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் உருவாக்கப்பட்டதாகும். சன்னிகள் ஷியாக்களைத் தீண்டாத்தகாதவர்கள் என்று கருதுவதில்லை. அதுபோல் ஷியாக்களும் கருதுவதில்லை. தவறான கொள்கையில் உள்ளனர் என்று ஒருவர் மற்றவரைப் பற்றி கருதுகிறார்களே தவிர பிறப்பால் தாமே உயர்ந்தவர்கள் என்று எந்தப் பிரிவும் கருதுவதில்லை.

ஓரே மொழி பேசக் கூடியவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன. ஓரே ஊரைச் சேர்ந்தவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன. ஓரே குடும்பத்தவரிடையேயும் சண்டைகள் நடக்கின்றன. ஒரு தாய்க்குப் பிறந்த இரண்டு சகோதரர்களுக்கிடையே சண்டைகள் நடக்கின்றன. சண்டைகள் நடப்பதால் எப்படி இஸ்லாத்தைத் தேர்வு செய்வது என்று தயங்கத் தேவையில்லை. சண்டைகள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒரு மொழி பேசக்கூடிய மக்களிடையே சண்டைகள் நடக்க அம்மொழி எப்படி காரணமாக இல்லையோ. ஒரு மாநிலத்தவரிடையே ஏற்ப்படும் சண்டைகளுக்கு அம்மாநிலம் எப்படிக் காரணமாக இல்லையோ ஒரு குடும்பத்தவரிடையே ஏற்படும் சண்டைகளுக்கு அக்குடும்பம் எப்படிக் காரணமாக இல்லையோ அது போல் தான் ஒரு மதத்தவரிடையே நடக்கும் சண்டைகளுக்கும் அம்மதம் காரணம் இல்லை.

இன்னும் சொல்வதானால் இவர்களிடையே சண்டைகள் நிலவிடக் காரணம் இஸ்லாத்தின் போதனைகளை அவர்கள் கைவிட்டது தான்.

Thursday, September 09, 2004

(ரஹ்) (அலை) (ஸல்) (ரலி) என்றால் என்ன?

கேள்வி:
(ரஹ்) (அலை) (ஸல்) (ரலி) என்றால் என்ன? அதன் விளக்கம் என்ன? அதன் அர்த்தம் என்ன? அதை ஏன் போடுகின்றீர்கள்? அதை ஏன் அந்த காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு மட்டும் போடுகிறீர்கள்? அதை ஏன் இப்போது உள்ள முஸ்லிம்களுக்கு போடுவதில்லை?

பதில்:
ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி லஸல்லம் என்பதன் சுருக்கமாகும். எழுத்தில் ஸல் என்று கூறப்பட்டாலும் வாசிக்கும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வாசிக்கவேண்டும் அவர் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும். சாந்தியை வழங்கட்டும் என்பது இதன் பொருள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்படும் போது அவர்களுக்காக ஸலவாத் கூற வேண்டும் அதாவது அவர்களுக்காக இறையருள் வேண்டி துஆச் செய்யவேண்டும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இது பற்றி வலியுறுத்தி உள்ளார்கள். எனவே, முஹம்மது நபியைப்பற்றிக் கூறும் போது அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும் என்பதையும் சேர்த்துக் கூறுகிறோம். ஒவ்வொரு சமுதாயமும் தங்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட நபிமார்களைக் கடவுளர்களாக ஆக்கி விட்ட நிலையில் முஸ்லிம்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைக் கடவுளாக ஆக்காமல் இந்த அடைமொழித் தடுத்து வருகிறது.

நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ஸலவாத் என்ற பெயரில் அவர்களுக்கு நாம் துஆச் செய்கிறோமே தவிர அவர்களிடம் துஆச் செய்யமாட்டோம் என்ற தெளிவை முஸ்லிம் சமுதாயத்துக்கு ஸலவாத் என்னும் பழக்கம் உருவாக்கியுள்ளது.

(அலை) என்பது "அலை ஹிஸ்ஸலாம்" அல்லது "அலை ஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்" என்பதன் சுருக்கமாகும். நபிகள் நாயகம்(ஸல்) தவிர மற்ற நபிமார்களைப் பற்றிக் கூறும் போது இவ்வாறு பயன்படுத்தி வருவது வழக்கமாகவுள்ளது. அவர் மீது இறைவனின் சிறப்பருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள். அதாவது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதற்கு என்ன பொருளோ அதே பொருள் தான் அலை ஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்பதற்கும் பொருளாகும்.

நபிகள் நாயகம் (அலை) என்றோ மூஸா (அலை) என்றோ பயன்படுத்தினால் அதில் எந்தத் தவறும் இல்லை. பழங்கால நூல்களில் இப்படிப் பலரும் பயன்படுத்தியுள்ளனர். ஆனாலும் "ஸல்" என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் (அலை) என்பதை மற்ற நபிமார்களுக்கும் பயன்படுத்துவதை வழக்கமாக ஆக்கிவிட்டனர். (ரலி) என்பது ரலியல்லாஹு அன்ஹு என்பதன் சுருக்கமாகும். அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது இதன் பொருள். இதை எந்த இறை நம்பிக்கையாளருக்கும் இறைவனின் பொருத்தம் தேவையானதுதான்.

ஆனாலும் இதை நபித்தோழர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது. கட்டாயமான ஒன்றல்ல நபித்தோழர் அல்லாத மற்றவர்களுக்கும் (ரலி) என்பதைப் பயன்படுத்துவது மார்க்கம் சட்டப்படி குற்றமல்ல. உங்களைக் கூட தஸ்னீம் (ரலி) எனக் கூறலாம். ஆனாலும் (ரலி) என்பது அதன் அர்த்தத்தைக் கடந்து நபித்தோழர்களின் அடையாளாமாகவே இன்று ஆகிவிட்டது. மற்றவர்களுக்கு ரலி என்று பயன் படுத்தினால் அவர்கள் நபித்தோழர்களாக இருப்பார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும் இதைக் கவனத்தில் கொண்டு மற்றவர்களுக்கு இதைப் பயன்படுத்தாமல் தவிர்க்கலாம்.

ரஹ் என்பது ரஹ்மத்தல்லாஹி அலைஹி என்பதன் சுருக்கம் அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக என்பது இதன் பொருள் எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். ஏனெனில் அனைவருக்குமே அல்லாஹ்வின் அருள் தேவைதான் ஆனால் நடைமுறையில் இறந்தவர்களுக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பிரபலமானவர்களுக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனக்கோ உங்களுக்கோ இதைப் பயன்படுத்தினால் நாம் எந்தக் காலத்திலோ வாழ்ந்து மடிந்தவர்கள் என்று மக்கள் நினைப்பார்கள். இதை எவருக்கும் பயன்படுத்தலாம். மார்க்க ரீதியாக இதற்குத் தடை இல்லை.