Wednesday, November 03, 2004

குர்ஆன் அரபி மொழியில் இறக்கப்பட்டது ஏன்?

கேள்வி:
உலகம் முழுவதும் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. அத்தனை மொழிகளையும் தவிர்த்துவிட்டு உங்கள் வேதமாகிய குர்ஆனை ஏன் இறைவன் அரபி மொழியிலே இறக்கி வைத்தான்?

பதில்:
மனிதர்களிலிருந்து தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமாக இறைவன் வேதங்களை வழங்கியுள்ளான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அம்மொழியில் வேதங்கள் அருளப்பட்டன. ஈஸா என்னும் இயேசு நாதரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று குர்ஆன் கூறுகிறது. அவருக்கு இஞ்சீல் என்னும் வேதம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. அந்த வேதம் அரபு மொழியில் அருளப்படவில்லை இயேசுவின் தாய்மொழியில் தான் அருளப்பட்டது.

நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி தான் தெரியும். அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகத்துக்கு அவர்களின் தாய்மொழி அரபியில் வேதம் அருளப்பட்டது. அவருக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால் தான் அவரால் அதற்கு விளக்கம் கூற முடியும். அரபு மொழி தான் சிறந்தது என்ற அடிப்படையில் அவ்வாறு அருளப்படவில்லை.

அரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்ததே இதற்குப் போதிய சான்றாகும்.